மயிலாடுதுறை மாவட்டம், குளிச்சார் ஊராட்சி அரும்பூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கென்று தனி சுடுகாடு ஒரு கி.மீ தொலைவில் உள்ள வயல்வெளிப் பகுதியில் அமைந்துள்ளது.
உடலை அடக்கம் செய்வதில் உள்ள சிரமங்கள்
கோடைக் காலத்தில் யாராவது இறந்துவிட்டால் வயல்வெளியில் எந்தத் தடையும் இல்லாமல் இறந்தவர் உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்துவிடுகின்றனர். ஆனால், மழைக்காலத்தில் இறந்தவர்களது உடலை இந்தப் பகுதியின் வழியாகக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
செல்லும் பாதையில் அரும்பூர் வாய்க்காலில் இறங்கி, வயலில் நடந்து, வரப்பில் ஏறிச்சென்று மீண்டும் வயலில் இறங்கிச் செல்லும் அவலம் ஏற்படுகிறது. முன்னதாக இப்பகுதியில் இறந்த விவசாயி மாரியப்பன் என்பவரின் உடலை சிரமப்பட்டு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
மயானப்பாதை அமைத்து தரக் கோரிக்கை
இதனால், அரும்பூர் வாய்க்காலில் ஒரு பாலமும் மீதமுள்ள 300 மீட்டர் தூரத்திற்கு வயல்பகுதியில் உள்ள வரப்பில் மயானச் சாலை வசதியும் செய்து கொடுக்கவேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்தும் வந்தனர். ஆனால் இதுகுறித்து தற்போது வரை அரசு அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இது குறித்து தனி கவனம் செலுத்தி தங்களுக்கு மயானப்பாதை அமைத்துத்தர வேண்டும் என்று அரும்பூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆற்றைக் கடந்து அடக்கம் செய்யப்பட்ட உடல் - தொடரும் அவலம்!