மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் மிகப் பிரசித்திபெற்றதும், பக்தி காவியமான ராமாயணத்துடன் நேரடித் தொடர்பு கொண்ட திருத்தலமாகவும் உள்ள மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள த்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.
ஆஞ்சேநேயர் அவதரித்த தினமான மார்கழி மாதம் மூல நட்சத்திர தினத்தையொட்டி இவ்விழா நடைபெறுகிறது. மூன்று கண்களும், பத்து கைகளும் உள்ள ஆஞ்சநேயர் அமைப்பு தமிழ்நாட்டிலேயே இந்த கோயிலில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தனிச்சிறப்பாக அனந்தமங்கலம், ராமாயணத்துடன் நேரடித்தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஆஞ்சநேயர் இளைப்பாறிய இடம்:
ராமபிரான் கட்டளையை ஏற்றுக் கடலில் பதுங்கி இருந்த இரு அரக்கர்களை அழித்து, அனுமன் ராமபிரானை சந்திக்க திரும்பிக் கொண்டிருக்கும்போது, அனந்தமங்கலத்தில் இளைப்பாற இறங்கியபோது, இயற்கை அழகுடன் இருந்த இப்பகுதியில், மன நிறைவோடு, ஆனந்தம் அடைந்தார்.
எனவே, இந்த திருத்தலம் அனந்தமங்கலம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள அனுமனை வழிபட்டால் பிரம்மா, விஷ்ணு, சிவன் உள்ளிட்ட மூன்று கடவுளர்களையும் ஒருங்கே வழிபட்ட பலன் கிடைப்பதுடன், பில்லி சூனியம் மற்றும் நவக்கிரக தோசங்களிலிருந்தும் விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தொழில் முனைவோர், திருமணம் ஆகி குழந்தை வரம் வேண்டுவோர் என ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து அனுமனை வழிபடுகின்றனர்.
இந்த ஆண்டு, ஆஞ்சநேய ஜெயந்தியை முன்னிட்டு, மூலவருக்குத் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அபிசேக ஆராதனை நடைபெற்றது.
ஆன்மிக சொற்பொழிவு மற்றும் ஆஞ்சேநேயர் வீதியுலா ஆகியவையும் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் அனுமனை வழிபட்டனர்.