மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா தர்காஸ் கிராமத்தில் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகை மற்றும் பொருள்கள் இன்று (ஜன.5) முதல் வழங்கப்படுகிறது. இதற்காக அரசு ரேஷன் கடை வாசலில் அதிமுகவினர் பேனர் வைத்துள்ளனர்.
அதில், ’புரட்சி தலைவி அம்மாவின் நல்லாட்சி தொடர வாக்களிப்பீர், இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்!’ என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பேனர்களை அகற்ற ரேசன் கடை அலுவலர்கள் யாரும் முன்வராததால் ரேஷன் கடை அலுவலர் மற்றும் அதிமுகவினரை கண்டித்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் திமுகவை சேர்ந்த ஜெயபிரகாஷ் தலைமையில் திமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தர்காஸ் - சீர்காழி செல்லும் சாலையில் நேற்று நடைபெற்ற இந்தச் சாலை மறியலில் திரளான திமுகவினர் கலந்துகொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுபட்டினம் காவல் துறையினர் பேனரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:நான்கு ஊராட்சியின் கீழ் ஒரு கிராமம்!