நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம், வண்டிபேட்டையைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகன் சுந்தர்(23). இவர் சென்னையில் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நாகை, திருவாரூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரியில் படிக்கும் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார் சுந்தர்.
இதனிடையே நாகையைச் சேர்ந்த பெண் ஒருவரையும் திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்த பெண்ணிடம் நெருக்கமாக உள்ள புகைப்படத்தை பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.இதனால் பாதிக்கப்பட்ட பெண் நாகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, நேற்று இரவு சென்னை சென்ற தனிப்படை காவல்துறையினர் சுந்தரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் சுந்தரின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ததில், அதில் ஏராளமான பெண்களுடன் சுந்தர் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பெண்களை ஏமாற்றுதல், பாலியல் துன்புறுத்தலில் அத்துமீறி ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சுந்தரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டையேபொள்ளாச்சி சம்பவம் உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், நாகையில் பற்றிய பாலியல் தீ பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.