நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் குத்தாலம் தாலுகா, ரெங்கநாதபுரம் கிராமத்தில் கீழஅக்ரஹாரம் பகுதி விக்ரமன் ஆற்றில் புதிய பாலம் கட்ட பட்டியலின மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்ரமன் ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே பாலம் இருக்கும் நிலையில், பாலத்தின் அருகே 500 மீட்டர் தொலைவில் புதிய பாலம் கட்ட கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக இன்று ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணிகள் தொடங்கியது. இதற்கு பட்டியலின மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.
1997ஆம் ஆண்டு சடலத்தை தூக்குதல் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டு 18 பஞ்சாயத்து ஒன்றுகூடி பொதுவாக இந்த பாலத்தைக் கட்டினர். பின்னர், இரண்டு தரப்பு மக்களும் இந்தப் பாலத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது ஒரு தரப்பு மக்களுக்காக மாற்று பாலம் கட்டினால், மீண்டும் சாதிப் பிரிவினை உண்டாகும்.
இரட்டை குவளை முறை போல இரட்டைப் பாலம் இந்த கிராமத்தில் உருவாகும் எனக் கூறி, புதிய பாலம் கட்டும் பணியை அரசு கைவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து குத்தாலம் இன்ஸ்பெக்டர் வள்ளி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்ததன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து, பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க:சீற்றம் காரணமாக கடல் அரிப்பு: குடியிருப்புக்குள் நீர் உட்புகும் அபாயம்!