மயிலாடுதுறை: பழம்பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70 ஆவது வயது நிறைவையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இன்று (மார்ச் 29) பீமரத சாந்தி திருமணம் செய்து கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயில் அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப் பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம் ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்ததும் உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.
இந்த தலத்தில் ஆயுள் ஹோமம் பிரசித்தி பெற்றது. அந்த வகையில், 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதை பூர்த்தி செய்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதை பூர்த்தி செய்தவர்கள் பீமரத சாந்தி, 80 வயதை பூர்த்தி செய்தவர்கள் சதாபிஷேகம், 90 வயதை பூர்த்தி செய்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயதை பூர்த்தி செய்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆகவே, குறிப்பிட்ட வயதை எட்டியவர்கள் இங்கு வருவது வழக்கம்.
இதையும் படிங்க: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் 148 திருமணங்கள் ரத்து!
இதனால் வருடம் 365 நாட்களும் இங்கு திருமணம் நடைபெறும். இந்த கோயிலுக்கு பழம்பெறும் நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70ஆவது வயது நிறைவை யொட்டி நேற்றிரவு (மார்ச் 28) மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்ட பிரபு, ஹேமசந்திர பிரபு மற்றும் மருமகள்கள், பேரக்குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடன் வருகை தந்தார். அதன் பின் கஜபூஜை, கோபூஜை செய்து முதல்கால யாகசாலை பூஜையில் பங்கேற்று அம்பாளை வழிபட்டு தரிசனம் செய்தார்.
அதனை தொடர்ந்து இன்று (மார்ச் 29) கோயில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு, பீமரத சாந்தி திருமணம் சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பூர்ணாகுதி செய்யப்பட்டு செந்தில் அவரது மனைவிக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பின் நடிகர் செந்திலுக்கும் அவரது மனைவி கலைச்செல்விக்கும் கலச அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து செந்தில் - கலைச்செல்வி தம்பதி மாலை மாலை மாற்றிக் கொண்டு பீமரத சாந்தி திருமணம் செய்து முடித்தனர்.
அதன் பின் குடும்பத்தினர் உடன் கோயிலை சுற்றி வந்து கள்ள விநாயகரை வழிபட்டு விட்டு, அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார். முன்னதாக, கோயிலுக்குள் வந்த நடிகர் செந்தில் உடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். முன்னதாக செந்தில் தனது 60ஆவது திருமணத்தை அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 100 வயதை கடந்த தம்பதிக்கு பூர்ணா அபிஷேக திருமணம்