நாகை மாவட்டம் சீர்காழியில் வெளிமாநிலத்தவர்களால் நெருங்கிவரும் பேராபத்து என்ற தலைப்பில், சீர்காழி வர்த்தக நலச்சங்கத்தின் தலைவர் கோபு ஒரு துண்டுப்பிரசுரத்தை சீர்காழி நகரில் விநியோகம் செய்துள்ளார்.
அதில், சீர்காழி நகரில் அடகு வைத்து பிழைப்பு நடத்தி வந்த மார்வாடிகள் மற்றும் வெளி மாநிலத்தவர் இன்று அனைத்துத் தொழில்களிலும் ஜவுளி, வாகன உதிரிபாகங்கள், மின்பொருட்கள், உணவு தொழில், கல்வி நிலையங்கள், நிதி நிறுவனம், விவசாய, நிலம் வாங்குதல் போன்ற அனைத்துத் தொழில்களிலும் தங்களை நிலை நிறுத்திவிட்டனர். இனியும் இவர்களை நாம் அனுமதித்தோம் என்றால் நம் நிலம் இழப்பு என்பது நம் தாயக இழப்பு ஆகும். எனவே நம் மண்ணை விட்டு அகலும் நிலை ஏற்படும்.
மேலும் சீர்காழி வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தையும் குடும்பத்தையும் காத்திட சீர்காழி நகரில் வெளி மாநிலத்தவருக்கு கடையோ, வீடு, வாடகைக்கு, விற்பனைக்கு கொடுக்க மாட்டோம் என்று சீர்காழி நகர பகுதி மக்களும் சீர்காழி வர்த்தக நல சங்கமும் உறுதியேற்போம். மேலும் வெளி மாநிலத்தவர் கடைகளிலும், நிறுவனங்களிலும், நம்மக்கள் அவர்களிடம் எந்தவிதமான வர்த்தகமும் செய்ய மாட்டோம் என்றும் உறுதியேற்போம்.
என அந்தத் துண்டுப்பிரசுரத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இந்தப் பிரசுரம் தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர். ஒரு சிலர் இதற்கு எதிரான கருத்துகளையும் பதிவு செய்துவருகின்றனர்.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்ற சொல்லுக்கு மாறாக பரவிவரும் இந்த துண்டுப்பிரசுரம் சீர்காழியில் உள்ள வெளிமாநிலத்தவர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.