மயிலாடுதுறை: பூம்புகார் அடுத்த மேலையூர் ராசாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம். கொலை, மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்த சிவானந்தம் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.
மேலும் சிவானந்தத்தின் மீது, குரங்கு புத்தூரில் டாஸ்மார்க் கடையை உடைத்துக் கொள்ளையடித்த வழக்கு, தலச்சங்காடு பகுதியில் 45 சவரன் தங்கம் கொள்ளையடித்த வழக்கு, மயிலாடுதுறை அருகே மணக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தது உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இரண்டு ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து தலைமறைவாக இருந்த சிவானந்தத்தைத் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். மேலும் அவரது வீட்டிற்கு அருகே காண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில், ராசாங்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சிவானந்தம் வந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.
செம்பனார்கோயில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு இடங்களில் கொள்ளை அடித்த தங்கத்தை உருக்கி பிஸ்கட்டுகளாக மாற்றி வைத்திருப்பதாக சிவானந்தம் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
25 சவரன் மதிப்பிலான தங்க பிஸ்கட்டை கைப்பற்றிய போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: டிச.19-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்