மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட வரதாச்சாரியார் பூங்காவில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு சிலை வைக்க பீடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மயிலாடுதுறையில் வரதாச்சாரியார் பூங்காவில் நடைபெற்றுவரும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு உருவச்சிலை அமைக்கும் பணி ஆய்வு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை அமையவுள்ள இடம், சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபம் பராமரிப்பு பணி ஆகியவற்றை ஆய்வு செய்யவுள்ளேன். மயிலாடுதுறை மாவட்ட நூலகம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தில்லையாடி வள்ளியம்மை நினைவு மணிமண்டபம் பராமரிப்பதற்கு ரூ.24 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஒப்புதல் அளித்தவுடன் பணி தொடங்கப்படும். மாவட்ட நூலகம் அமைப்பதற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது எனத் தெரிவித்தார். இந்த பணியின்போது மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: அனுமன் ஜெயந்தி: புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு