நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூரை அடுத்த அப்பராஜ புத்தூர் கிராமத்தில் அரசு மதுபானக் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையின் மேலாளராக விளந்திட சமுத்திரத்தைச் சேர்ந்த அசோக்குமார் (45) என்பவர் பணியாற்றி வருகிறார்.
வயல்வெளி பகுதிக்கு நடுவே அமைந்துள்ள இந்த மதுபானக் கடையின் வியாபாரத்தை முடித்துவிட்டு நேற்றிரவு (ஆகஸ்ட் 3) அசோக்குமார் கடையை மூடி சென்றுள்ளார். இதையடுத்து, இன்று (ஆகஸ்ட் 4) காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த அசோக்குமார் பக்கவாட்டு சுவர் துளையிடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது துளையிட்ட சுவர் வழியாக உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், 93 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது, பீர் பாட்டில்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து பொறையாறு காவல் நிலையத்தில் அசோக்குமார் தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் யுவபிரியா தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டு மதுபாட்டில்களை திருடிச்சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் இந்த கடையில் சிசிடிவி கேமரா எச்சரிக்கை அலாரம் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.