நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அடுத்துள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அரசுக்கு சொந்தமான ஐயனார் கோயில் திடலில் 2006ஆம் ஆண்டு 500 மீட்டர் பரப்பளவில் மணல் குவாரி அமைத்து ஒருவர் மணல் விற்பனை செய்துள்ளார்.
அரசு விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமான ஆழத்தில் மணல் எடுத்ததன் காரணமாக மணல் குவாரியானது குளம் போல் மாறியது. இதனை அரசு அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை.
நிவர் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, இந்த மணல் குவாரியில் மழைநீர் நிரம்பியது. இந்த சூழலில் அதே கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரது மகள் (7) தமிழ்செல்வி, அவரது தோழிகளுடன் மணல் குவாரிக்கு விளையாட சென்றார்.
அப்போது அங்கிருந்த மிதவையில் ஏறியுள்ளார். மிதவை மழைநீரில் கவிழ்ந்ததில் சிறுமி மூழ்கினார். இதை இவரது தோழிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். உடனே கிராம மக்கள் விரைந்து குவாரி மழைநீரில் மூழ்கிய சிறுமியை உயிரிழந்த நிலையில் மீட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறுமியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காதலித்து ஏமாற்றிய காவலர் - 17 வயது சிறுமி தீக்குளிப்பு!