நாகப்பட்டினம்: மயிலாடுதுறையைச் சேர்ந்த கந்தன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். 58 வயதாகும் இவர், தினந்தோறும் உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் அவசியத்தை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.
1981ஆம் ஆண்டு முதல் உடற்பயிற்சி செய்து வரும் கந்தன், தினந்தோறும் அதிகாலையில் எழுந்து வெயிட் லிப்டிங் பயிற்சி கூடத்திற்குச் செல்கிறார். இளைஞரைப் போன்று பயிற்சி செய்து உடல் ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சியுடன் தன் பணிகளையும் கடமைகளையும் செய்து அசத்தி வருகிறார்.
“தற்போது உள்ள இளைஞர்கள் நண்பர்களுக்காகவும், மன மகிழ்விற்காகவும் சிற்றின்பம் என்ற பெயரில் நாகரிகம் என்ற கோர்வையில் தங்களது உடலையும், குடும்ப வாழ்வாதாரத்தையும் அழித்துக் கொள்கிறார்கள். போதை என்ற மாயையில் தங்களது உடலைக் கெடுத்துக் கொண்டு எல்லோருடைய நிம்மதியையும் கெடுத்து விடுகிறார்கள்.
சமுதாயத்தில் சிலர் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து போதைப் பொருட்களைப் பயன்படுத்தி தவறான பாதைக்குச் செல்வதால், அவர்களின் திருமண வாழ்க்கைக்குப் பிறகு மிகவும் பாதிக்கப்படுவது வருத்தமளிக்கிறது” என கந்தன் கூறுகிறார். மேலும், உடல் என்பது கோயில், உயிர் என்பது இறைவன் போன்றது என்றும் அவர் மேற்கோள் காட்டுகிறார்.
உடலைப் பேணிக் காத்தால் வேலைவாய்ப்பு: கோயிலைப் போன்று உடலையும், கடவுளைப் போன்று உயிரையும் பாதுகாக்க வேண்டும். கோயில் சுத்தமாக இல்லை என்றால், அங்கு தெய்வம் இருக்காது என்றும் கூறுகிறார். உடலை பேணிக் காப்பதினால் கல்வி முடித்துவிட்டு தகுதி இருந்தும் வேலை கிடைக்கவில்லை என்று சொல்வதை விட, இந்த பயிற்சியினால் விளையாட்டு கோட்டா மூலம் அனைத்துத் துறைகளிலும் படிப்பிற்குத் தகுந்தார்போல் வேலை கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
தேசப்பற்று: நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது என்று கூறினார். வலுவான இளைஞர்களாலேயே வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும் எனக் கூறுகிறார், கந்தன். மேலும், நாட்டின் தேசப்பற்றை உணர்த்தும் வகையில் கை தோள்பட்டையில் ஒரு பக்கம் தேசியக்கொடியும், ஒரு பக்கம் அசோகச் சக்கரத்தையும், கையில் வந்தே மாதரம் என்றும் பச்சை குத்தியுள்ளார்.
இரண்டு மகள்கள் மற்றும் மகனுக்குத் திருமணம் செய்து வைத்து பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக உடல் ஆரோக்கியத்துடன் தன் காவல்துறை பணியைச் சிறப்பாகச் செய்து வாழ்ந்து வருவதாகக் கூறும் காவல் துறை அதிகாரி கந்தன், இக்கால இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து இளைஞரைப் போன்று கம்பீர நடையுடன் 58 வயதிலும் மிடுக்காக வலம் வருவதற்கு உடற்பயிற்சி அவசியம் என உணர்த்தி உள்ளது என்றார்.
மேலும், இதைப் பார்த்துவிட்டு பத்து இளைஞர்களாவது உடற்பயிற்சி செய்தால், அதுவே எனக்கு பரிசாக இருக்கும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: மகளிருக்கு 33% சிறப்பு; திருநங்கைகளுக்கு 2% இடஒதுக்கீடு எப்போது? - திருநங்கை பத்மினி அரசுக்கு கோரிக்கை