நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் 4ஆம் சேத்தி கிராமத்தில் 96 கோடி ரூபாய் செலவில் வேதா ஆயத்த ஆடை ஜவுளி பூங்கா அமைய உள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் ஜவுளி பூங்காவில் தையல் பயிற்சி பெறுவதற்கு முதல்கட்டமாக 3 ஆயிரத்து 600 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன தையல் இயந்திரங்கள் மூலம் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சி மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.
இந்தப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு படிப்பு, வயது, தடையில்லை. எவருடைய சிபாரிசும் தேவையில்லை. நம்பிக்கை இருந்தால் அனைவரும் சாதிக்க முடியும்” என்றார்.