மயிலாடுதுறை: தென்னை மரம் மூலம் மட்டை, பாலை, இளநீர், தேங்காய் ஆகியவை கிடைக்கின்றன. குட்டை, நெட்டை என தென்னை மரங்களில் பல வகை உண்டு. தென்னை எல்லா வகை மண்களிலும் வளரக் கூடியது.
இப்படியிருக்க மறையூர் கிராமத்தில் வசிக்கும் விவசாயி சிவக்குமார் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் குலைகுலையாய் தேங்காய் காய்க்கிறது. இவர் தனது வீட்டு வாசலில் 12 ஆண்டுகளுக்கு முன்பு வைத்த தென்னை மரம் 22 அடி உயரம் வளர்ந்து ஐந்து ஆண்டுகளாக நன்றாகக் காய்த்துக் குலுங்கியது.
2018ஆம் ஆண்டு தாய் மரத்தில் காய்த்த நெத்துதேங்காயை எடுத்து வீட்டின் கொல்லையில் சிவக்குமார் பதியம் செய்துள்ளார்.
தாய் மரம் நன்றாக காய்த்துவந்த நிலையில், 2019ஆம் ஆண்டு பெய்த கனமழையின்போது இடி தாக்கியதில் கருகி மரம் பட்டுப்போய்விட்டது. இதனால் குடும்பத்தினர் வருத்தத்தில் இருந்தனர்.
இந்நிலையில்தான் பதியம் போட்டுவைத்த மரம் 3 அடி உயரத்தில் வளர்ந்த நிலையில், தேங்காய் காய்க்கத் தொடங்கியதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். சிறிய மரத்தில் தேங்காய் காய்க்கும் செய்தியறிந்து கிராம மக்கள் ஆச்சரியத்துடனும், வியப்புடனும் அந்த மரத்தைச் சென்று பார்த்துவருகின்றனர்.
தற்பொழுது இந்தத் தென்னை மரத்தில் குலைகுலையாய் தேங்காய் காய்த்துத் தொங்குகிறது. இந்த மரத்தில் உள்ள தேங்காய், இளநீரைப் பறித்து கோயில் அபிஷேகத்திற்கு கொடுப்பதாகவும் இதுவரை 50-க்கும் மேற்பட்ட தேங்காய் பறித்துள்ளதாகவும் சிவக்குமார் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும் அவர் உற்சாகத்துடன் மரத்தைப் பாதுகாப்பாகப் பராமரித்துவருகிறார்.
இதையும் படிங்க: திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல தொங்கு பாலம் - எ.வ. வேலு