நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள புலவனூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. வீட்டின் முன்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை தனது உறவினர் வீட்டு விசேஷத்துக்காக கும்பகோணம் சென்றுவிட்டு, மீண்டும் மாலை வீடு திரும்பியுள்ளார்.
வீட்டின் உள்ளே நுழைந்தவுடன், வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அறைக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 12 சவரன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மணல்மேடு காவல் நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளைச்சம்பவம் அக்கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மதுபானக் கடையில் கொள்ளையடித்த கொள்ளையன் கைது!