நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராகப் பணியாற்றிவருபவர் இளமதி. இவரது கணவர் ஹரிராமன் தணிக்கையாளராகப் (ஆடிட்டர்) வேலை செய்கிறார். தம்பதியர் பெருமாள் கீழ வீதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருகின்றனர். இருவரும் காலையில் பணிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்புவது வழக்கம்.
நேற்று வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடுதிரும்பிய இளமதி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 15 சவரன் தங்க நகைகள், நான்காயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்தத் திருட்டுச்சம்பவம் குறித்து இளமதி நாகை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் கொள்ளையர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
காவலர்களின் முதற்கட்ட விசாரணையில், வெளிமாநில கொள்ளையர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் களமிறங்கியுள்ளதாகவும் இவர்கள் பூட்டியிருக்கும் வீடுகளில் நோட்டமிட்டு பின்னர் ஆள் இல்லாத வீடுகளில் Y என்றும் ஆள் இருக்கும் வீடுகளில் X எனவும் அடையாள குறியீட்டை பென்சிலால் வரைந்து பகல் நேரங்களில் இக்கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றிவருவது தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த மாதத்தில் நாகை அரசுப்பள்ளி தலைமையசிரியர் இளமாறன் உள்ளிட்ட பல்வேறு வீடுகளிலும் இதே பாணியில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் நாகை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வாக்காளர்களுக்காக வைத்திருந்த 957 மதுபாட்டில்கள் - இருவர் கைது