மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா, மடப்புரம் பெரிய சாவடி குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன் (45), கீற்று முடியும் தொழில் செய்பவர். இவரது கூரை வீடு இரவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. அதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், அருகருகே கூரை வீடுகள் இருந்ததால் 20க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலைவாணன் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ மேலும் பற்றி எரிந்தது. அதை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஜெயப்பிரதாப் (40), ஜெயக்குமார் (45), மணிமாறன் (48), ஜெகதீஷ் (27), வினோத் ராஜ் (34), ராஜேஷ் (36), இளையபெருமாள் (43), மதன் (19), பிரேமா (28), கருணாநிதி (48), சுரேஷ் (40), சரவணன் (43), கலியபெருமாள (68), சுரேஷ்குமார் (19), நடராஜன் (23), உள்ளிட்ட 15 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
உடனடியாக, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து முதலுதவி பெற்ற 12 பேர் கூடுதல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை தீக்காயம் பெறுவதற்கான சிறப்பு வார்டு இல்லாததால் 50% சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் அடைந்த சுரேஷ், கருணாநிதி சரவணன் ஆகிய மூன்று பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தகவலறிந்த செம்பனார்கோயில் மற்றும் மயிலாடுதுறை போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும், அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று (ஜூலை 29) மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 12 பேரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘அனைவரும் நலமாக உள்ளனர். இரண்டு, மூன்று நாட்களில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்.
இதையும் படிங்க:இலவச வீடு வழங்க லஞ்சம் கேட்ட ஊராட்சி மன்றத் தலைவர்? - மாற்றுத்திறனாளி தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்!