மதுரை: தமிழ்நாடு முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் ஜாமீனில் வெளிவந்த பிறகு மீண்டும் அவதூறான கருத்துக்களை யூடியூப்பில் பரப்பியதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக ஏற்கனவே வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வழக்கு நீதிபதி புகழேந்தி முன் இன்று(மார்ச் 17) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் ஆஜராகி யூடியூப் தொடர்பான விதிகள், சட்டத்திருத்தங்கள் மற்றும் முழு விவரங்களை நீதிபதி முன் தாக்கல் செய்தார்.
அப்போது நீதிபதி "யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் யூடியூபர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வீடியோக்களை வெளியிடுகின்றனர். இதனால் அவர்கள் பலன் அடைந்து கொள்கின்றனர். ஆனால் அது பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட காரணமாகின்றது" என தெரிவித்தார்.
பின்னர், தமிழ்நாட்டில் சைபர் குற்றங்களை விசாரிக்க எத்தனை காவல்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்? அவர்களின் விசாரணை அலுவலர் யார்? என்பது குறித்த தகவல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: ஆடைகளைக் கழற்றாமல் சீண்டுவதும் பாலியல் குற்றமே: மேகாலயா நீதிமன்றம்