மதுரை: நள்ளிரவில் முயல் வேட்டைக்குச் சென்ற இரண்டு இளைஞர்கள், காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட மின்சார கண்ணியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது இடையபட்டி கிராமம். பெருமளவு மானாவாரி நிலங்களைக் கொண்ட இப்பகுதியில், தற்போது மழை குறைவு காரணமாக வேளாண் பணிகள் நடைபெறவில்லை.
இந்த கிராமத்தை ஒட்டியுள்ள காட்டுப் பகுதியில் காட்டுப் பன்றிகளும், முயல்களும் பெருமளவு வசித்து வருகின்றன. எனவே கிராமத்தைச் சேர்ந்தோர், இப்பகுதியில் உள்ள முயல்களை வேட்டையாடி உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் விவசாய நிலங்களில் அத்துமீறும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த, இங்குள்ள கண்மாய்க் கரைப் பகுதிகளில் மின் இணைப்புடன் கூடிய கம்பிகளைப் பிணைத்து மின்சார கண்ணிகள் அமைத்துள்ளனர்.
இந்நிலையில் இடையபட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி (21), அலப்பலச்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த அனுமந்த ராஜா (17) மற்றும் மனோஜ் ஆகியோர் முயல் வேட்டைக்காக நள்ளிரவு ஒரு மணி அளவில் சென்றுள்ளனர். அப்போது, காட்டுப்பன்றியைக் கட்டுப்படுத்துவதற்காக மின் இணைப்புடன் மின்சார கண்ணி அமைத்திருந்த கம்பிகளை இந்த இளைஞர்கள் மிதித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆன்மீக ஆட்சிதான் நடக்கிறது - தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம்
இதனால் மின்சாரம் தாக்கி கருப்பசாமியும், அனுமந்த ராஜாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அச்சமயம் அங்குள்ள மின்மாற்றியில் கடுமையான சத்தம் ஏற்பட்டு தீப்பொறி உருவாகி மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஊர் பொதுமக்கள் சிலர் சத்தம் கேட்டு கண்மாய் பகுதிக்கு வந்து பார்த்தபோது, அங்கே அனுமந்த ராஜா மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில், மனோஜ் காயமடைந்து கிடந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நாகையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்த இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மின்சாரத் தாக்குதலால் காயமுற்ற மனோஜ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து நாகையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முயல் வேட்டைக்குச் சென்று மின்சார கம்பியில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் இடையபட்டி மற்றும் பேரையூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: INDIA கூட்டணியினரை குண்டு கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்!