மதுரை மாநகர் மகபூப்பாளையம் அன்சாரிநகர் 7ஆவது தெருவைச் சேர்ந்தவர் முஹமது அலி. இவருக்கு திருமணமாகி மனைவி, இரு குழந்தைகளுடன் வசித்துவந்தார். இவர் தனது உணவகத்தை மேம்படுத்துவதற்காக செல்வக்குமார் என்பவரிடம் ரூ.3 லட்சம் கடன் பெற்றுள்ளார். ஊரடங்கு காரணமாக உணவகம் மூடப்பட்டதால் போதிய வருமானம் இல்லை.
கடன் கொடுத்தவர்கள் அவரிடம் தொடர்ச்சியாக கூடுதல் வட்டி கேட்டு தொல்லை அளித்துள்ளனர். வாங்கிய தொகையைவிட அதிகளவு செலுத்திய பிறகும் தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்துள்ளனர். இந்நிலையில் தனது தற்கொலைக்கு செல்வக்குமார் காரணம் எனக்கூறி காணொலி வெளியிட்டு முஹமது அலி தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து அவரது உடல் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முன்பாக இளைஞர் வெளியிட்ட காணொலியில், "வட்டித்தொகையை கேட்டு செல்வக்குமார் அவரது கூட்டாளிகள் ஜெய்சிங், மாரிமுத்து உள்ளிட்டோர் தொடர்ந்து இழிவுபடுத்துகின்றனர்.
எனது நண்பர்கள் உதவி செய்கின்றனர். வட்டிதொகையை கட்ட முடியாததால் தற்கொலை செய்ய போகிறேன். இதற்கு காரணமான நபர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு பிறகு எனது மனைவிக்கோ நண்பர்களுக்கோ யாரும் தொல்லை தரக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது இளைஞரின் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பெண் காவலர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு - தொடர் மிரட்டல்!