உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மாபெரும் சிறுநீரக மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறையின் தலைவரும் மருத்துவருமான சம்பத்குமார், சிறுநீரக அறுவை சிகிச்சை துறை தலைவரும் மருத்துவருமான ரவிச்சந்திரன், சிறுநீரகவியல் துறை மருத்துவர் ஆண்ட்ரூ தீபக் ராஜிவ் ஆகியோர் கருத்தரங்கில் உரையாற்றினர்.
சிறுநீரக செயலிழப்பு
கருத்தரங்கில் பேசிய சிறுநீரகவியல் துறையின் தலைவர் டாக்டர் சம்பத்குமார், "சிறுநீரக செயலிழப்பு உலக அளவில் உயிரிழப்பிற்கான ஆறாவது முக்கியக் காரணம். இது சப்தமில்லாமல் உயிரைக் கொல்லும் நோய். பாதிப்பு கடுமையாக இருக்கிறபோது சிகிச்சையால் குணப்படுத்த முடியாது.
சிறுநீரில் புரதப் பரிசோதனை, ரத்தத்தில் புரதப் பரிசோதனை, கிரியாட்டினின் பரிசோதனைகளை செய்வதன் மூலம் நோய் பாதிப்புள்ளதா என்பதைக் கண்டறிய முடியும்" என்றார்.
சிறுநீரக கற்களின் பாதிப்பு
சிறுநீரகக் கற்களின் பாதிப்பு குறித்து மருத்துவர் ரவிச்சந்திரன் கூறுகையில், "அதிக உப்பு சேர்த்த உணவுகள், கேஃபைன் சர்க்கரை, மென்பானங்கள், சாக்லேட்டுகள், பருப்புகள், விலங்குகளின் புரதம் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுப்பதற்கு அதிக அளவு தண்ணீர் அருந்துவது, பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது முக்கியம். சிறுநீர் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் வழியாக சிறுநீரகக் கற்கள் இருப்பதை கண்டறிய முடியும். சிறுநீரகக் கல்லை அகற்ற அறுவை சிகிச்சையும் சிலருக்குத் தேவைப்படலாம்" என்றார்.
இதையும் படிங்க: சிறுநீரக நோயாளிகள் கரோனா வைரஸ் நோயிலிருந்து தப்புவது எப்படி?