மதுரையைச் சேர்ந்த புஸ்பவனம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "மதுரையில் இருந்து திருச்சி செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே 2.5 கி.மீ., சாலையானது பச்சைமலை, பெரியமலை வனப்பகுதியை இணைக்கக்கூடிய பாதையாக உள்ளது.
இந்தத் தேசிய நெடுஞ்சாலையில் விலங்குகள் சாலையைக் கடக்கும்போது வாகனங்களில், அடிபட்டு இறக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது.
மிருகங்கள் அடிபட்டு உயிரிழக்கும் நிலை
இப்பகுதியில் மான்கள், சிறிய வகை பூனைகள், பாம்புகள், பல்லி இனங்கள் எனப் பலவகையான மிருகங்கள் அடிபட்டு காயம் அடைந்தும், இறந்தும் வருகின்றன.
மதுரையில் இருந்து திருச்சி வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே 2.5 கிலோ மீட்டர் சுரங்கப் பாதை அமைப்பதற்கான திட்டம் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு அனுப்பப்பட்டு கிடப்பில் இருந்து வருகிறது.
எனவே, மதுரை முதல் திருச்சி வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் 2.5 கிலோ மீட்டர் பாதையில் இரண்டு வனப் பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் கடந்து செல்வதற்காக சுரங்கப் பாதை அல்லது மாற்றுப் பாதைகள் அமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறைச் செயலர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்கு துறைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த குற்றவாளி கைது