கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவத் தொடங்கியதையடுத்து, முகக்கவசங்கள் மீது பெரும்பாலான மக்களின் கவனம் திரும்பியது. இதனால், கள்ளச்சந்தைகளிலும், வீதிகளிலும் முகக்கவசங்கள் கைமாறத் தொடங்கின. அதனுடைய விலையும் கிடுகிடுவென உயர்ந்தது.
இதையடுத்து, அரசு நிர்ணயித்த விலையைவிட அதிக விலை நிர்ணயித்து பாதுகாப்பு உபகரணங்களை விற்பனை செய்வோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையில், விமான நிலையங்களிலிருக்கும் பெருநகரங்களில் கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவத் தொடங்கியதையடுத்து, அங்கு மலிவான விலையில் முகக்கவசங்கள், கிருமிநாசினி உள்ளிட்டவை விற்பனையாகத் தொடங்கின.
மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பெருந்தொற்று ஏற்பட்டுள்ளது. சமூகப் பெருந்தொற்று பரவல் மூலமாக இந்த வைரசை இவர் பெற்றிருக்கிறார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நேதாஜி சாலையில் முகக்கவசம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
பெருநகரத்தின் சாலை என்பதால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிகமிருக்கும். தூசு, புகை உள்ளிட்ட மாசுக்காரணிகளில் முகக்கவசம் அதிகமாகப் பாதிப்படையும் வாய்ப்புள்ளது. திறந்தவெளி விற்பனை என்பதால், நோய்தொற்றுகூட ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, அரசு இதுபோன்ற அறியாமையைப் போக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நுட்பமான பாதுகாப்புப் பொருள்களைக் கையாள அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'நியாய விலைக் கடை தங்குதடையின்றி செயல்படும்' - தமிழ்நாடு அரசு