திருத்தொண்டர் சபையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், துாத்துக்குடியில் சங்கர ராமேஸ்வரர் மற்றும் வைகுண்ட பகுதி கோயில்கள் உள்ளன இந்த கோயில் சொத்துக்களை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். சிலர் அலுவலர்களின் துணையுடன் கோயில் சொத்துக்களுக்கு தவறாக உரிமை கொண்டாடுகின்றனர் . இக்கோயில் சொத்துக்களை மீட்கக் கோரி அறநிலையத்துறைக்கு மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, துாத்துக்குடியில் சங்கர ராமேஸ்வரர் மற்றும் வைகுண்ட பகுதி கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை மீட்க உரிய நடடிவக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்ந மனு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசின் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது ,முதலில் 5.25 லட்சம் ஏக்கர் என்றனர். பின் 4.75 லட்சம் ஏக்கர் என்றனர். இப்படி கோயில் சொத்துகள் சுருங்கி வருகிறது. எனவே கோயில் சொத்துகளை மீட்க எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அரசு வழக்கறிஞர், சங்கர ராமேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சில சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயில்களின் சொத்துக்கள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்றார்.
தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் எத்தனை கோயில்கள் உள்ளன. அவற்றுக்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளன. அதில் எத்தனை அடையாளம் காணப்பட்டுள்ளன. அச்சொத்துக்கள் குத்தகை அல்லது வாடகைக்கு விடப்பட்டுள்ளனவா? அதற்கு வாடகை வசூலிக்கப்படுகிறதா?
ஏற்கனவே, நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க, எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக குழு எதுவும் அமைக்கப்பட்டுள்ளதா என அறநிலையத் துறை ஆணையர், வருவாய்த் துறை செயலர் உள்ளிட்டோர் அக்டோபர் 16ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.