மதுரை: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் மாசிலாமணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாகவும், ஊதிய உயர்வு செய்து தரக் கோரியும் மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார்.
அந்த மனுவில், "தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரிபவர்கள் மழை, வெள்ளம், வெயில், போன்ற அனைத்து காலங்களிலும் 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர். குறிப்பாக விஐபிகள் வரும் காலங்களிலும் சாலை ஓரங்களில் நின்றும் பொதுமக்களைப் பாதுகாக்கும் பணி செய்துவருகின்றனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1000 பேருக்கு 2 பேர் என்ற விகிதத்தில் மட்டுமே காவல் துறையினர் உள்ளனர். அவர்கள் குறைந்த ஊதியத்திலும் பணிபுரிந்துவருகின்றனர். மத்தியப் பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிளுக்கு 38 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் 40 ஆயிரம் வரையிலும், மேற்கு வங்கத்தில் 28 ஆயிரத்து 500 ரூபாய், மகாராஷ்டிராவில் 29 ஆயிரத்திலிருந்து 34 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
ஏழை நாடான உகாண்டாவில்கூட 47 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மழை, வெயில் பாராமல் பணிபுரியும் காவலர்களுக்கு வெறும் 18 முதல் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் காவலர்களாக நியமிக்கப்படும் 90 விழுக்காட்டினர், அவர்களது வீட்டிலிருந்தும், சொந்த ஊர்களிலிருந்தும் வெகு தொலைவிலேயே பணியமர்த்தப்படுகின்றனர் .
எனவே, அவர்களுக்கு வழங்கப்படும் இந்த மிகக்குறைந்த ஊதியம், அவர்களது வாழ்க்கை நடத்துவதற்கு போதிய அளவில் இல்லாமல் உள்ளது. 24 மணி நேரமும் பணியில் ஈடுபடும் தமிழ்நாடு காவலர்களின் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும். அதேபோல் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், காவல் துறையினர் இன்றி நம்மால் ஒரு மணி நேரம்கூட இருக்க முடியாது. போக்குவரத்து காவல் துறையினர் இல்லாமல் வாகனங்கள் சாலையில் செல்ல முடியாது.
சில நிகழ்வுகள் காவல் துறையினரைத் தவறாகச் சித்திரித்தாலும் காவல் துறையினர் நமக்குத் தேவையானவர்கள். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் காவல் துறையினர் மிகுந்த சிரமத்தில் உள்ளனர் என்றனர்.
மேலும் பேசிய அவர்கள்,
1) காவல் துறையினர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன?
2) காவல் துறையினருக்குச் சரியான நேரங்களில் பதவி உயர்வு வழங்கப்படுகிறதா?
3) காவல் துறையில் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன?
4) காவல் துறையினருக்குத் தமிழ்நாட்டில் வழங்கப்படும் ஊதியம் மற்றும் மற்ற மாநிலங்களில் வழங்கப்படும் ஊதியம் குறித்த தகவல்
5) காவல் துறையினருக்கு என சிறப்பு காப்பீடு செய்யப்பட்டுள்ளதா?
6) 2013ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி காவல் துறையினருக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதா, அமைக்கப்படவில்லை என்றால் எப்போது அமைக்கப்படும்?
7) தமிழ்நாட்டில் எத்தனை காவல் துறையினர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் போன்ற கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ’காவல் பணி போல் குடும்பமும் முக்கியம்’