திமுக கூட்டணிக் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி வழங்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பாக புதூர் பூமிநாதன் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் வாக்குச் சேகரிப்பதற்காக மதிச்சியம் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட புதூர் பூமிநாதனை அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு மருமகனை வரவேற்பது போன்று வாங்க மருமகனே எனக் கூறி 27 வகையான சீர்வரிசைகள், ஆடு, மாடு, கோழி, அரிசி, பருப்பு என மளிகைப் பொருள்களை வைத்து பூரண கும்ப மரியாதையுடன் மலர்த்தூவி வரவேற்றது காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த வேட்பாளர் பூமிநாதன் அப்பகுதி மக்களை வணங்கி வாக்குச் சேகரித்தார்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது, "கிராமப்புறங்களில் தங்கள் வீட்டு மகளை திருமணம் முடித்துகொடுக்கும்போது வீட்டிற்கு வரும் மருமகனை சீர்வரிசை கொடுத்து வரவேற்பது வழக்கமான செயலாகும்.
அவ்வாறே, எங்கள் தொகுதியை மகளாகவும், ஓட்டு கேட்டுவரும் வேட்பாளரை மருமகனாகவும் எண்ணி 27 வகையான சீர்வரிசைப் பொருள்களுடன் வரவேற்பளித்தோம். வெற்றிபெற்று எங்கள் தெற்குத் தொகுதி செல்ல மகளை செல்வ செழிப்புடன் வாழவைப்பார்" என்றும் நம்பிக்கை கூறினர்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு எதிராகக் களமிறக்கப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகி