அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் டிடிவி தினகரன் பரப்புரை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மதுரை, மத்தியத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி சார்பில் போட்டியிடும் சிக்கந்தர் பாஷா, மதுரை மேற்குத் தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாலசந்திரன் ஆகியோரை ஆதரித்து நேற்று (மார்ச்.29) பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் டிடிவி தினகரன் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், ”இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் மக்கள் விரும்பாத துரோக ஆட்சியை நீங்கள் முடிவுக்கு கொண்டு வரவும், அதே போலவே தீயசக்தி கூட்டம் மீண்டும் வரவிடாமல் தடுக்கவும், வெற்றிச் சின்னம் முரசு, மதுரை மேற்கு மற்றும் மதுரை மத்திய தொகுதியில் குக்கர் சின்னங்களில் வாக்களித்து அமோக ஆதரவைத் தர வேண்டும்.
அனைத்து மதங்கள், சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையுடன் வாழ, வேலைவாய்ப்புகளை உருவாக்க, அரசு ஊழியர்களுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றித் தர முரசு, குக்கர் ஆகிய சின்னங்களில் வாக்களியுங்கள்.
தீய சக்திகள் எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை தடுத்து நிறுத்துவது உங்கள் கடமை. அதேபோல் தமிழின துரோகிகளை ஆட்சியில் தொடர விடாமல் செய்வது உங்கள் கடமை. இதை நீங்கள் சரிவர செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல தமிழர்கள் தலை நிமிர வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:'அடக்குமுறையால் வெல்வது கொடுங்கோல்' - மோடியின் புதுச்சேரி வருகையை விமர்சித்த கமல்