தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணிபுரியும் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர், மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தலைமை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டு தரையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்து பேருந்துகளில் அழைத்துச் சென்றனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மண்டலச் செயலாளர் உமாநாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’வர்தாபுயல், ஒக்கி புயல், கஜா புயல் உள்ளிட்ட பேரிடர்களின் போது உயிரைப் பணயம் வைத்து பணிகளை மேற்கொண்டவர்கள் ஒப்பந்த ஊழியர்கள், மேலும் பல்வேறு பேரிடர்களின் போதும் பெரும்பாலும் உயிரிழந்தவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களே என்றும் தெரிவித்தார்.
ஆகவே ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பைக் கருத்தில் கொண்டு பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மின்சார வாரிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அவ்வாறு நிரந்தரம் செய்யா விட்டால், அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் இணைந்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வாரா ராகுல் காந்தி?