மதுரை: திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து பணிமனையில், கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் மதுரை பைக்காரவைச் சேர்ந்த ஓட்டுநர் முத்துப்பாண்டி. இவர் தனது ஓட்டுநர் பணியை மிகவும் நேசித்து, மக்களோடு இயங்கி பணியாற்றி ஊழியர்களாலும் அன்பு பாராட்டப்பட்டவர்.
இந்த நிலையில், 30 ஆண்டுகளாக ஓட்டுநராக பணியாற்றிய இவர், நேற்று (ஜூன் 1) ஓய்வு பெற்றார். எனவே, தன்னோடு இத்தனை ஆண்டுகளாக நண்பனாக, உற்ற தோழனாக இருந்த தனது பேருந்தை தொட்டு வணங்கி முத்தமிட்டார். பின்னர் அதை பிரியப் போகிறோமே என்ற சோகத்தில் இறுக்கிப் பிடித்து கண்ணீர் மல்க அழுத காட்சி சமூக வலைதளங்களில் பரவி காண்போரை கண்கலங்க வைத்தது.
பொதுவாக அரசுப் பணிகளில் இருந்து பணி ஓய்வு பெறுகின்ற ஒவ்வொருவரும் தங்களோடு பணியாற்றிய நண்பர்களோடு கடைசி நாட்களில் அன்போடும், பரிவோடும் பழகுவது என்பது இயல்பான காட்சி. குறிப்பாக, லோகோ பைலட் என்று அழைக்கப்படுகின்ற ரயில் ஓட்டுநர்கள், தாங்கள் பணியாற்றிய ரயிலின் முன்பு கண்ணீரோடு விடைபெற்றுச் செல்லும் காட்சிகளை அடிக்கடி காண முடிகிறது. தன் பணியை நேசிக்கும் ஒவ்வொருவரும் அதன் மிக்கியத்துவம் பற்றியும், அந்த பணி கொடுத்த நம்பிக்கை பற்றியும் நிச்சயம் அறிவர்.
இதையும் படிங்க: ஆடல், பாடல் குறித்த புதிய மனுக்களை விசாரிக்க தேவை இல்லை - மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து
இதேபோன்று பேருந்து ஓட்டுநர் முத்துப்பாண்டி, தான் பணியாற்றிய அரசுப் பேருந்தை கட்டிப் பிடித்து கதறி அழுத வீடியோ அவர் அந்தப் பணியை எவ்வளவு நேசித்திருப்பார் என்பதை உணர்த்துகிறது. இதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில், “எனது பெற்றோருக்கு அடுத்தபடியாக நான் மிகவும் நேசித்தது எனது ஓட்டுனர் தொழிலைத்தான்.
இந்தப் பணி எனக்கு கிடைத்த பிறகுதான் எனக்கு திருமணம் ஆனது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் எனக்கு கிடைத்தது. கடந்த 30 ஆண்டுகளாக இந்தப் பணியை நேசித்து செய்தேன் என்ற மன மகிழ்ச்சியோடு இன்று பணி நிறைவு செய்கிறேன்” என்றார். மேலும், சமகாலத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் தனது நன்றியை கண்ணீர் மல்க கூறிப் பேசினார்.
இவ்வாறு, தன் பணி ஓய்வு பெற்ற நாளில், தான் ஓட்டிய அரசு பேருந்தை கட்டித் தழுவி, முத்தமிட்டு கண்ணீர் ததும்ப தன் வாழ்வில் தனக்கு நடைபெற்ற திருமணம், சமூக மதிப்பு என கிடைத்த அனைத்து பயன்களுக்கும் தனது பணிதான் எனக் கூறியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:“நீதிமன்ற உத்தரவுகளை மத்திய அரசு பின்பற்றுவது இல்லை” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை