மதுரையின் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மதுரை தொகுதி, தென்தொகுதி வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இது தொடர்பாக நிதியமைச்சரை இரண்டு முறை நேரில் சந்தித்தேன். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும். அதற்கான நிதியை மூன்று ஆண்டுக்குள் முழுமையாக ஒதுக்குவேன் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மதுரை-கோவை போன்ற மேற்கு மண்டல ரயில் சேவையை உயர்த்த வேண்டும். மதுரையிலிருந்து தூத்துக்குடி வழியாக செல்லக் கூடிய ரயில்களின் சேவையை உயர்த்தி தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். மிக முக்கியமாக தேஜஸ் ரயில் முதல் தமிழகத்தில் இயக்கப்படும் எல்லா ரயில்களுக்கும் மரபு சார்ந்த பெயரே வைக்கப்பட வேண்டும் என்றும், தேஜஸ் ரயிலுக்கு 'தமிழ்சங்க ரயில்' என பெயர் வைக்க வேண்டும் என்று நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறேன்.
மதுரை சிவகங்கை சாலையில் மத்திய கனரக தொழிற்சாலையை மத்திய அரசு அமைக்க வேண்டும். தொழில்துறை வளர்ச்சிக்கு மதுரை மையமாக உள்ளது. தென்தமிழக வளர்ச்சிக்கு மதுரை உரிய இடமாக உள்ளது. 200க்கும் மேற்பட்ட ரப்பர் தொழிற்சாலைகள் மதுரையில் உள்ளது. இது போன்ற திட்டங்களை நிதியமைச்சருடன் பேசியதோடு இல்லாமல் செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்போம். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எம்.பிக்களுக்கு சாதமாகவே பேசியுள்ளதாக அவர் தெரிவித்தார்.