திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற விழாவானது வைகாசி விசாக விழா. கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு விழா ரத்து செய்யப்பட்டதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த மாதம் வசந்த உற்சவ விழா ரத்துசெய்யப்பட்டது. வைகாசி விழாவிற்கான காப்பு கட்டுதலும் நடைபெறவில்லை. இந்நிலையில், பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோயில் நிர்வாகம் சார்பில் இன்று வைகாசி விசாக விழா நடைபெற்றது.
பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் கோயில் நிர்வாகம் சார்பில், சண்முகர் சன்னதியில் சண்முகர், வள்ளி-தெய்வானை சுவாமிகளுக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், கோயில் துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் பங்கேற்றனர்.
வைகாசி விசாக விழாவையொட்டி மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள், கோயில் வாசல் முன்பு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தும் விதமாக பால்குடம் எடுத்துவந்து, சூடம் ஏற்றி வழிபட்டனர். ஒரு சிலர் அங்குள்ள வேல் மீது பாலை ஊற்றி அபிஷேகம் செய்துவிட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க:அழகர்கோயிலில் நடைபெற்ற சூர்ணோற்சவம் விழா!