மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே உள்ள அவனியாபுரத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சு விரட்டுப் போட்டியை வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.
90 மாடுபிடி வீரர்கள் இந்த மஞ்சு விரட்டில் கலந்துகொண்டு 20க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கினர். மதுரை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட சுற்றுப் பகுதியில் இருந்து, 20க்கும் மேற்பட்ட வடமாடு மஞ்சு விரட்டு காளைகள் இதில் பங்குபெற்றன.
வடமாடு மஞ்சு விரட்டில் காளைகளின் திமிலை மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை அள்ளிச் சென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, குத்து விளக்கு, கேடயம், பரிசுக்கோப்பை, கன்று குட்டி உள்ளிட்ட விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியைக் காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் குவிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், '' வீரத்தையும், விவேகத்தையும், பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் எடுத்துச் சொல்கின்ற ஜல்லிக்கட்டு, இந்தியாவில் முதன் முதலாக அவனியாபுரத்தில் தொடங்கும். அதனுடைய பாரம்பரியத்தை பறை சாற்றும் விதமாக இன்று வடமாடு மஞ்சு விரட்டுப் போட்டி நடைபெறுகிறது'' என்றார்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் இரண்டு தமிழர்கள் - மறைக்கப்பட்ட உண்மையைக் கூறும் 'மெரினா புரட்சி'