மதுரையிலிருந்து உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக பல ஆண்டுகாலமாக நடைபெற்றுக்கொண்டிருந்த மதுரை-போடி ரயில்வே பணி, அகலப்பாதையாக மாற்றம் பெறுகிறது. இதன் அடிப்படையில், அகல ரயில் பாதை பணிக்கு 2006ஆம் ஆண்டு மத்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியது. அகலப்பாதை பணிகளைத் தொடங்குவதற்காக, 2011ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியுடன் இப்பாதை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் நறுமணப் பொருள்கள் உள்ளிட்ட விவசாயப் பொருள்களை மதுரைக்கு விற்பனைக்காகக் கொண்டுசெல்ல, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு போடி-மதுரை ரயில் பாதை வரப்பிரசாதமாக இருந்துவருகிறது. பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்டு கடந்த 84 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ரயில் பாதை மிகச்சிறப்பாக இயங்கிவருகிறது.
இந்தத் தடத்தில் மதுரையிலிருந்து போடிவரை பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, தேனி மருத்துவக் கல்லூரி என வரிசையாக கல்லூரிகள் அமைந்துள்ளன. மேற்கூறிய கல்லூரிகளில் பயிலும் மாணவ -மாணவிகளுக்கு இந்தப் பாதை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
ஏறக்குறைய 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போடி-மதுரை அகல ரயில் பாதைப் பணிகள் தற்போது உசிலம்பட்டிவரை நிறைவுபெற்றுள்ளது. ஆகையால் இந்தப் பாதையில் ரயில் செல்வதற்கு ஏதுவாக டிராலி மூலம் சோதனை முயற்சிகள் நடைபெற்றுவந்தன.
இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து உசிலம்பட்டிவரை 120 கிலோமீட்டர் வேகத்தில் எஞ்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள் கொண்ட ரயிலில் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட அலுவலர்கள் பயணம் செய்தனர்.
இன்று மாலையில் ரயில் மூலம் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு மேற்கொண்ட பின்னர், ரயில் பாதைக்கான பாதுகாப்புச் சான்றிதழ் அளித்த பிறகு ரயில் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'சட்டம் ஒழுங்குக்கு பங்கமான கருத்துக்கு கடும் நடவடிக்கை' - கடம்பூர் ராஜு..