தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கு முன்பு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாநகராட்சி ஊழியர்கள் துணியால் மூடினர்.
அதன்படி மதுரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரின் சிலைகள் துணிகொண்டு மே 2ஆம் தேதி வரையில் மூடப்பட்டிருக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் சிலையை மறைத்திருந்த துணியை அகற்றியும் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டும் உள்ளது.
இதேபோல் மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்ததோடு அதன் அருகில் திமுக கொடியும் வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து மதுரை கே.கே. நகர் சந்திப்பில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்களின் சிலைகளும், தமுக்க மைதானம் பகுதியில் உள்ள நேரு சிலையும் தற்போது வரையில் துணியால் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.