மதுரை: தமிழ்நாட்டில் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளின் பரப்புரை தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் மதுரை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளிலும் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் களமிறங்குகின்றன. நேற்று (பிப்ரவரி 14) காணொலிக் காட்சி வாயிலாக திமுக தலைவர் ஸ்டாலின் மதுரையில் பரப்புரை மேற்கொண்டார்.
இதனையடுத்து அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மதுரை முனிச்சாலையிலுள்ள ஓபுளா படித்துறையில் பரப்புரை மேற்கொண்டார். மதுரையில் போட்டியிடும் 100 வார்டுகளின் திமுக வேட்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.
மேற்கு வங்கத்தைப் போன்று தமிழ்நாட்டிலும் சட்டப்பேரவையை முடக்குவோம் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்த நிலையில், அதனை செய்து காட்டக்கோரி எடப்பாடிக்கு உதயநிதி சவால்விட்டார்.
மதுரையில் திமுக நிறைவேற்றியுள்ள திட்டங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்த பொதுமக்களில் ஒருவர் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்துக் கேட்டார்.
அப்போது, கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின்போது எடுத்த அந்தச் செங்கல்லை கையோடு கொண்டுவந்திருக்கலாமே எனக் கேட்க, உடனே உதயநிதி, அதனை நான் கொண்டுவரவில்லை. மோடியிடம் கொடுத்துவிட்டேன் எனக் கிண்டலடித்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு தொல்லை கொடுக்கும் பாஜக - நாராயணசாமி குற்றச்சாட்டு