மதுரை: ஒரு காலத்தில் நகர்ப்புற மற்றும் புறநகர்ப்புறங்களில் கல்லூரி பயிலும் மாணவ, மாணவியருக்கு மாலை நேர பரபரப்பென்றால் அது தட்டச்சுப் பயிற்சிப் பள்ளிகள்தான். கையில் தாளை சுருட்டிக் கொண்டு அப்பள்ளிகளுக்குச் சென்று திரும்புவது இயல்பான காட்சியாக இருக்கும். இயக்குநர் பாலாஜி தயாரித்த 'விதி' என்ற திரைப்படத்தில் தட்டச்சுப் பள்ளிகளின் மீதான அன்றைய இளம் தலைமுறையினர் பார்வையைக் கொண்டே அதில் காட்சிகள் பலவற்றை அமைத்திருப்பார். அப்படத்தில் ஆச்சி மனோரமாவின் 'எல்ஓவிஇ... எழுத்த தட்டித்தட்டியே தேச்சுபுட்டான் போங்க' என்ற வசனம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும்.
இடையில் கணினி யுகம் பிறந்த பின்னர், தட்டச்சுப் பள்ளிகள் சற்று சுணக்க நிலையை எட்டியிருந்தன. இதனால், இத்துடன் அவை முடிவுக்கு வந்துவிடுமோ என்ற அச்சம்கூட நிலவியது. ஆனாலும், கணினியில் தட்டச்சு செய்தாலும், அவற்றுக்கு தட்டச்சுப் பொறிகள் மூலமாக உள்ளன என்பதும் மறுக்க முடியாதது. ஆனாலும் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தன. தமிழ்நாடு அரசின் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் தட்டச்சு கல்வித் தகுதி முக்கியமான ஒன்றாக இருப்பதால் தற்போது இளந்தலைமுறை மாணவ, மாணவியரிடம் அதனைக் கற்கும் ஆர்வம் பிறந்துள்ளது நல்ல மாற்றம்.
கணினி யுகம்
இதுகுறித்து மதுரை மாவட்ட தட்டச்சு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் செயலாளரும் நாகமலை கனி ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் இயக்குநருமான கருணாகரன் கூறுகையில், "கணினி யுகம் என்று நாம் கூறிக் கொண்டாலும், தற்போது தட்டச்சுப் பயிற்சி குறித்த பார்வை மீண்டும் ஏற்படத் தொடங்கியுள்ளது. வல்லரசு நாடான ரஷ்யாவில் இன்றைக்கும் அவர்களது அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் தங்களின் பதிவேடுகளைத் தயாரிப்பதற்கு தட்டச்சுப் பொறிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். காரணம் தகவல்களை ஹேக் செய்ய முடியாது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அரசே தட்டச்சுத் தேர்வுகளை நடத்தி வருகிறது. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும்கூட தமிழ்நாட்டிற்கு வந்து தட்டச்சு பயின்று அரசுத் தேர்வு எழுதிச் செல்கின்றனர். தமிழ்நாட்டில் பயின்றவர்களே இன்றைக்கு நாடாளுமன்றம், பிற மாநிலங்களின் சட்டப்பேரவைகள், அரசுத் துறைகளில் பணியில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு தட்டச்சுக் கல்வி மிக முக்கியத்துவம் வாய்ந்தது" என்கிறார்.
அரசின் தொழில்நுட்பக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் வணிகவியல் தட்டச்சுப் பயிற்சிப் பள்ளிகள் தமிழ்நாடு முழுவதும் அரசால் அங்கீகரிக்கப்பட்டவை, சற்றேறக்குறைய 2,200-க்கும் மேல் உள்ளன. அரசின் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தட்டச்சுக் கல்வியும் முக்கியத் தகுதியாக உள்ளது. ஆண்டு தோறும் மாநிலம் முழுவதும் சராசரியாக 4 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர். இந்தத் தேர்வுகள் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆண்டிற்கு இரண்டு முறை நடைபெறுகிறது.
கருணாகரன் மேலும் கூறுகையில், "டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் நுழைவுத்தேர்வு, முதன்மைத் தேர்வுகளில் வெற்றி பெற்ற இருவர் சமமான மதிப்பெண் பெற்றிருந்தனர். நேர்முகத் தேர்வின்போது, தட்டச்சு தெரிந்திருந்த நபருக்கே தகுதியின் அடிப்படையில் வேலை அளிக்கப்பட்டது. இது மிக அண்மையில் நடந்த உண்மை நிகழ்வாகும். தட்டச்சுக் கல்வி பெறுவதற்கு 8ஆம் வகுப்பு கல்வித் தகுதியே போதுமானது. அதேபோன்று சுருக்கெழுத்தர்களுக்கான பணியிடங்களும்கூட ஒன்றிய, மாநில அரசுகளில் நிறைய துறைகளில் காலியாகவே உள்ளன" என்கிறார்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் மிகக் கடுமையான சூழலைச் சந்தித்த தட்டச்சுப் பயிற்சிப் பள்ளிகள், தற்போதுதான் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. தற்போதைய மாணவர்கள் மத்தியிலும், தனியார் துறைகளில் பயில்கின்ற நபர்களிடத்தில் தட்டச்சுக் கல்வி கற்கும் ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சுறுசுறுப்பான நிலை தட்டச்சுப் பள்ளிகளில் தென்படத் தொடங்கியுள்ளது ஆரோக்கியமான மாற்றமாகும்.
நினைவுத்திறன் அதிகரிப்பு
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் குடும்பத் தலைவி சரண்யா கூறுகையில், "சரிசமமான மதிப்பெண் பெற்றிருக்கும் இருவருக்கு தட்டச்சு கூடுதல் தகுதியாகப் பார்க்கப்படுகின்ற நிலையில், அரசுத் தேர்வுகளுக்காக நான் தட்டச்சு பயின்று வருகிறேன். மேலும் இதன் மூலமாக எனக்கு நினைவுத்திறன், மொழியறிவு அதிகரிப்பதை நான் முழுவதுமாக உணர்கிறேன்" என்கிறார்.
திறம்பட செயல்பட முடியும்
அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் சாருமதி கூறுகையில், "தட்டச்சு முன்னரே தெரிந்திருந்த காரணத்தால்தான் அங்கு அலுவல் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டேன். கணினி குறித்து நாம் அறிந்திருந்தாலும், அதற்கு அடிப்படையானது தட்டச்சுதான். வேகமாக தட்டச்சு செய்கின்ற நபரால்தான், தங்களுக்கான பணிகளை திறம்பட சிறப்பாக செய்ய முடியும் என்பது எனது நம்பிக்கை. அரசின் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அடிப்படைத் தகுதியாக தட்டச்சு இருக்கின்ற காரணத்தால், இதனை அனைவரும் கற்றுக் கொள்ள முன் வர வேண்டும்" என்கிறார்.
இளநிலை, முதுநிலையை நிறைவு செய்வேன்
தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் தங்கேஸ்வரி கூறுகையில், "தட்டச்சு கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திலிருந்த எனது அம்மாவுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆகையால் தற்போது என்னை கற்றுக் கொள்ள அனுப்பி வைத்துள்ளார். தற்போது 8 ஆம் வகுப்பிலேயே நான் இணைந்துள்ளதால், 10 ஆம் வகுப்பை நிறைவு செய்யும்போது தட்டச்சு இளநிலை, முதுநிலையை நிறைவு செய்திருப்பேன்" என்கிறார்.
உற்பத்தி நிறுத்தம்
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்துள்ள இந்த சூழலில், முன்னர் உற்பத்தி செய்யப்பட்ட தட்டச்சுப் பொறிகளையே தட்டச்சுப் பயிற்சிப் பள்ளிகள் மீண்டும் மீண்டும் பழுது பார்த்து பயன்படுத்தி வருகின்றன. இதற்கான காரணம் குறித்து கருணாகரன் கூறுகையில், "தங்களுக்கான வேலை வாய்ப்பிற்கான தகுதியை அதிகரித்துக் கொள்ள தட்டச்சுக் கல்வி முக்கியமானது என்பதால், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் வருகை தருகின்றனர். ஆனால், தட்டச்சுப் பொறிகளை உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும், மூடப்பட்டுவிட்டன. இயந்திரங்களை உருவாக்கும் அனைத்து அச்சுகளையும்கூட அழித்துவிட்டார்கள்.
சுயவேலைவாய்ப்பு என்ற அடிப்படையில், தட்டச்சுப் பள்ளிகளைத் தொடங்கும் இளைஞர்களுக்கான தட்டச்சு ஆசிரியர் பயிற்சி தேர்வெழுதி தேர்ச்சி பெற்று தங்களுக்கான உரிமங்களையும் பெறத் தொடங்கியுள்ளனர். அண்மையில் நடைபெற்ற தேர்வில்கூட 3 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்குத் தேவையான தட்டச்சுப் பொறிகள் கிடைப்பதில் பெரிய சிக்கல் உருவாகியுள்ளது. தற்போது எங்களின் பயன்பாட்டில் இருப்பவை 30 ஆண்டுகள் பழமையானவை. ஒன்றிய, மாநில அரசுகள் முயற்சியெடுத்து, இந்த சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டியது காலத்தின் கட்டாயம்" என்கிறார்.
அரசு வழிகாட்டுமா?
அண்மையில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் தட்டச்சு இயந்திரங்களின் மீது தனக்குள்ள காதலின் காரணமாக இதுவரை பயன்படுத்தப்பட்ட பழமையான, வெவ்வேறு வகையான 100-க்கும் மேற்பட்ட தட்டச்சுப் பொறிகளைக் கொண்டு கடந்த ஜனவரி மாதம் அருங்காட்சியகம் ஒன்றை வெங்கிட்டராமா என்பவர் உருவாக்கியுள்ளார். அவரது தந்தை கடந்த 1946 ஆம் ஆண்டு வாக்கில் பயன்படுத்திய ரெமிங்டன் 16 தட்டச்சுப் பொறியைக்கூட மிகப் பத்திரமாக அங்கே காட்சிப்படுத்தியுள்ளார். ஆனால் தட்டச்சு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை நிறுத்திவிட்டன. தட்டச்சுப் பயிற்சியில் இளம்தலைமுறையினரின் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், தட்டச்சு இயந்திர உற்பத்திக்கும், மாணவ, மாணவியரின் தட்டச்சு ஆர்வத்திற்கும் ஊக்கமளிக்கும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகள் நிச்சயம் வழிகாட்ட வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது தவறு - உயர் நீதிமன்றம்