மதுரையை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "மதுரை அருகே குன்னத்தூர் கிராமத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணராஜ் மற்றும் முனியாசமி ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திருப்பதி மற்றும் ஊராட்சி செயலர் வீரணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து விசாரணைக்கு பிறகு வரிச்சியூரை சேர்ந்த செந்தில் மற்றும் குன்னத்தூரை சேர்ந்த பாலகுரு ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.
ஆனால் காவல்துறையினர் உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விடும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். கொலை நடந்த அன்று குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திருப்பதி மற்றும் ஊராட்சி செயலர் வீரணன் ஆகியோருக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.
எனவே வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், வழக்கு விசாரணை முறையாக நடத்தி முடிக்கப்பட்டு , குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
மனுதாரர் தரப்பில், காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை. அவசரம் அவசரமாக விசாரணையை முடித்துள்ளனர். புகாரில் பெயர் குறிப்பிட்ட பலரது பெயர் விடுபட்டுள்ளது என கூறப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணை குறித்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஊமச்சிகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 11 ஒத்திவைத்தார்.