காவலாளி மர்மமான முறையில் கொலை...
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், மதுரை திருப்பரங்குன்றம் அருகே நாகமலை புதுக்கோட்டையில் தனியாருக்குச் சொந்தமான பஸ் பாடி கட்டும் கம்பெனியின் காவலாளி நித்யானந்தம் (65) கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது முகம், கை, கால்கள் ஆகியவை பேக்கிங் டேப் மூலம் கட்டப்பட்டிருந்தது.
சூனா பானா பாணியில் ஆட்டுத் திருட்டு...
கடந்த வாரம் இதே பகுதியைச் சேர்ந்த இரு விவசாயிகளின் ஆடுகள் திருடுபோயின. இது குறித்து பெறப்பட்ட புகாரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். காவலாளி கொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளான போதும் கொலையாளி குறித்த எந்தத் துப்பும் துலங்கவில்லை. கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியாமல், காவல் துறையினர் திணறி வந்த நிலையில், இந்த வழக்கிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
திங்கள் கிழமை (மார்ச் 9, 2020) அதிகாலை சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த காவலர்கள், சாலையில் சென்ற ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆட்டோவிலிருந்த ஆடுகளின் வாயில் டேப் சுற்றப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
டேப் சுற்றப்பட்டதற்கான காரணம் குறித்து காவலர்கள் ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரிக்க, அதற்கான நம்பகத்தகுந்த பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் ராக்கெட் ஜெயபால் என்பதும், அவர் ஆடுகளைத் திருடி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட ஆடுகளையும், 50க்கும் அதிகமான மாடுகளையும் திருடி விற்றதும் விசாரணையில் அம்பலமாகியது. அனைத்துத் திருட்டுச் சம்பவங்களிலும், சிக்காமலிருக்க கால்நடைகளின் வாயில் டேப்பை சுற்றிக் கடத்துவது, தன் வழக்கம் என்றும் ராக்கெட் ஜெயபால் கூறியுள்ளார்.
மீண்டும் டேப்...
கால்நடைகளின் கடத்தலிலும், காவலாளி கொலையிலும் இந்த 'டேப்' பாணியே பயன்படுத்தப்பட்டிருந்ததால், ராக்கெட் ஜெயபாலுக்கும் அந்தக் கொலைக்கும் தொடர்பிருக்கலாமா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கிடுக்குப்பிடி விசாரணையில் ராக்கெட் ஜெயபால், அந்தக் கொலையை, தன் கூட்டாளியான அப்பள பாண்டியுடன் சேர்ந்து செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
சிக்கிய கூட்டாளி அப்பள பாண்டி...
அவரிடம் வாக்குமூலம் வாங்கிய கையோடு அப்பள பாண்டியையும் அதிரடியாக காவல் துறையினர், கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஜெயபால் திருடும் ஆடுகளையும், அதற்காகப் பயன்படுத்தும் பொருள்களையும் வைப்பதற்காக பஸ் பாடி கட்டும் கம்பெனியில் இடமளிக்குமாறு நித்யானந்தத்திடம் கேட்டதாகவும், அவர் மறுத்ததால் ஆடுகளைக் கடத்தப் பயன்படுத்தும் பேக்கேஜ் டேப்பை காவலாளியின் கை, கால், வாய் ஆகியவற்றில் சுற்றிக் கொலை செய்ததாகவும் கூறினார்.
குற்றத்தை இருவரும் ஒப்புக்கொண்டதை அடுத்து, கொலை செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் துறையினர் சிறையிலடைத்தனர். இதன்மூலம் பல்வேறு கால்நடைத் திருட்டு வழக்குகள் முடிவுக்கு வரலாம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'மதுரையில் ஒரு சூனா பானா... 2 ஆண்டுகளில் 200 ஆடுகள், 50 மாடுகள் திருட்டு'