கரோனா நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த விரோனிகா மேரி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தற்போது கரோனா பரவல் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் ஐம்பது விழுக்காடு படுக்கைகள் காலியாக இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.
அரசு உத்தரவின்படி ஐம்பது விழுக்காடு படுக்கை வசதிகளையும் காலியாக வைப்பதில்லை. இதுகுறித்து மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே தனியார் மருத்துவமனைகள் படுக்கை வசதி, காலி இடங்கள், சிகிச்சை கட்டணம் குறித்து இணையதளத்தில் வெளியிடவும், ஐம்பது விழுக்காடு படுக்கை வசதியை ஒதுக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. பின்னர்,
1) கரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், அனைத்து சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்களை நீதிமன்றம் பாராட்டுகிறது.
2) இந்த சிக்கலான நேரத்தை பயன்படுத்தி தனியார் மருத்துமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயம் செய்துள்ளதைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது.
3) தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு வாங்க வேண்டிய கட்டணம் குறித்த அரசாணை அமல்படுத்தப்படுவதை அரசு எவ்வாறு கண்காணிக்கிறது?
4) கரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் யாரிடம் புகார் செய்ய வேண்டும்?
5) தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் எந்த பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்? என்ன தண்டனை வழங்கப்படும்?
6) தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் விபரம் குறித்த அரசாணை சரியாக அமல்படுத்தப்படுகிறதா? இல்லையா? என்பதை கண்காணிக்க வேண்டியது யார்?
7) இதுவரை கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக தனியார் மருத்துவமனைகள் மீது எத்தனை புகார்கள் வந்துள்ளன? அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
8) உத்தரபிரதேசம், டில்லி போன்ற மாநிலங்களில் இருப்பது போல் தனியார் மருத்துவமனைகளின் படுக்கை வசதி கட்டணம் ஆகியவற்றுக்காக அரசே ஏன் தனியாக இணையதளத்தை தொடங்கக்கூடாது?
9) தமிழ்நாடு முதலமைச்சர் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்தில் எத்தனை பேர் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெற்றுள்ளனர்?
போன்ற விபரங்களை மத்திய, மாநில அரசுகள் மே 12-ல் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.