மதுரையை சேர்ந்த லில்லி என்பவர் அரசு மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அரசு
அனுமதியில்லாமல் அதிக நாட்கள் வெளிநாட்டில் தங்கியிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு 2006இல் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதை ரத்து செய்து லில்லிக்கு ஓய்வூதியம், நஷ்டஈடு வழங்கக்கோரி அவரது கணவர் அலெக்ஸாண்டர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதி மகாதேவன், மனுதாரர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.
மேலும், இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருக்கும்போது அரசு மருத்துவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதைத் தவிர்க்க, தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.