மதுரை ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த கார்த்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில் (POSITRON EMISSION TOMOGRAPHY AND COMPUTED TOMOGRAPHY) நுண் கேன்சர் செல்லை கண்டுபிடிப்பதற்கான பெட் ஸ்கேன் வசதி இல்லை. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய்களுக்கான அனைத்து துறைகளும் உள்ளன.
இந்நிலையில், அதனை கண்டுபிடிப்பதற்கான PET – CT ஸ்கேன் வசதி இல்லாததால், ஏழை நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளை அணுக வேண்டியுள்ளது. இந்த ஸ்கேனிற்காக 15,000 முதல் 27,000 ரூபாய் வரை தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படுகிறது. எனவே, ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை புற்றுநோயியல் பிரிவில் PET – CT ஸ்கேன் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்” என தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஒருமாதத்தில் PET-CT ஸ்கேன் வசதியை ஏற்படுத்த கடந்த 2017 ஜனவரி மாதம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக்கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் PET ஸ்கேன் கருவி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், வரும் 20ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் இதே போன்ற வசதியை கோவை மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்த முடியுமா? என்பது குறித்து சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், PET ஸ்கேனுக்கான கட்டணத்தை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொணர இயலுமா? என்பது குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.