வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய எல்.ஹெச்.பி பெட்டிகளை இணைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி வண்டி எண்: 12636/12635 மதுரை - சென்னை எழும்பூர் ரயில்களில், மதுரையிலிருந்து புறப்படும் ரயிலில் 30ஆம் தேதியும், சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் ரயிலில் ஜூலை 1ஆம் தேதியும், இந்த புதிய ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. இதேபோல் வண்டி எண் 12605/12606 சென்னை எழும்பூர் - காரைக்குடி ரயில்களில், சென்னையிலிருந்து காரைக்குடிக்கு புறப்படும் ரயிலில் 30ஆம் தேதியிலிருந்தும், காரைக்குடியிலிருந்து புறப்படும் ரயிலில் ஜூலை 1ஆம் தேதியிலிருந்தும் இந்த புதிய பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.
இந்த ரயில்களில் மூன்று, இரண்டாம் வகுப்பு பொது பெட்டி, மூன்று குளிர்சாதன இருக்கை வசதி பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி, ஒரு சமையல் வசதி பெட்டி, இரண்டு காப்பாளர், மின்சார இயந்திர பெட்டிகளும் இணைக்கப்படும். மேலும் தற்போதுள்ள வழக்கமான ரயில் பெட்டிகளைக் காட்டிலும் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களைக் கொண்டு புதிய எல்.ஹெச்.பி. ரயில் பெட்டிகள் இயங்கும். விபத்துகளின் போது தடம்புரளாமல் தண்டவாளத்திலேயே நிற்கும் வடிவமைப்பைக் கொண்டுள்ளதால் பயணிகளின் உயிருக்கு உத்தரவாதமும் அளிக்கிறது.
சதாப்தி, தேஜஸ் உள்ளிட்ட சிறப்பு ரயில்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது. தற்போது பயணிகளின் நலன்கருதி முதன்முறையாக சாதா ரயில்களிலும் இந்த பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.