நமது நாட்டில் விமானம், பேருந்துகள், கப்பல்துறை என அனைத்திலும் தனியார் மயங்களின் தலையீடுகள் தலைவிரித்தாடுகிறது. தனியார் மயமாக்கப்படாத ஒரே துறை ரயில்வே துறைதான். தற்போது அதுவும் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துவருகின்றன.
இதனிடையே, ரயில்வே துறையை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து தக்ஷிண ரயில்வே ஊழியர் சங்கத்தின் சார்பாக மதுரை மேற்கு ரயில்வே நுழைவாயிலின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து, ரயில்வே ஊழியர் சங்கத்தின் செயலாளர் சங்கரநாராயணன் பேசுகையில், ”கோடிக்கணக்கான பாமர மக்களைப் பற்றி கவலைப்படாமல் 100 நாட்களில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பாஜக தாரை வார்த்துள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சியை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.
மேலும், இந்தியா முழுவதும் 12 ஆயிரத்து 700 பயணிகள் பயணிக்கும் ரயிலும், 7,420 சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்வேத் துறை தனியார் மயத்திற்கு மாற்றப்பட்டால் ரயில்வேயில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மட்டும் பிரச்னை அல்ல, கோடிக்கணக்கான பயணிகளையும் அது பாதிக்கும். இந்திய ரயில்வேயில் பல்வேறு சிறு குறு தொழிற்சாலைகள் நடத்தி லட்சக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் எனவும் பேசினார்.