இது குறித்து தேனியைச் சேர்ந்த வினோத் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
"கடந்த 2ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானது. ஊராட்சி பதவிகளுக்கான இந்தத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் ‘நோட்டா'வுக்கு வாக்களிக்கும்படி ஏற்பாடு செய்யப்படவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க சிலர் விரும்பமாட்டார்கள். அவர்கள் நோட்டாவை தேர்ந்தெடுத்து வாக்களிக்கவே விரும்புவார்கள்.
சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் நோட்டாவை தேர்வு செய்து வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை.
இதன்மூலம் மக்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தலில் நோட்டாவை தேர்ந்தெடுத்து வாக்களிக்கும் உரிமையை வழங்கும்படி கடந்த 9ஆம் தேதி மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன்.
இதுவரை எந்தப் பதிலும் இல்லை. எனது மனு அடிப்படையில் வருகிற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் நோட்டாவை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள், துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், விதிப்படி தேர்வு செய்யவில்லை எனில் அந்த வாக்கு செல்லாததாகிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடி வந்துள்ளார். ஆகவே தற்போது இதனை செய்ய இயலாது எனத் தெரிவித்தார். அதற்கு மனுதாரர் தரப்பில், இனிவரும் தேர்தல்களிலும் வாக்களர்களுக்கு இந்த உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் வாதம் எனக் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள் இது தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிக்க: 27 மாவட்டங்களைக் கண்காணிக்க பறக்கும் படை குழுக்கள் அமைப்பு!