மதுரை திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீமுனியாண்டிசுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் தைமாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று பிரியாணி திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறும். அதேபோல், 85ஆவது ஆண்டாக நடைபெற்ற விழாவில் பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி விரதம் மேற்கொண்டனர்.
நேற்று காலை விரதம் மேற்கொண்ட பக்தர்கள், பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனையுடன், சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை நடைபெற்ற விழாவில் கோயில் நிலைமாலையுடன் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களிலிலிருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூத்தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோயிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர்.
விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150ஆடுகள், 300க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு அதனைக் கொண்டு பிரியாணி தயார்செய்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் கோயில் காணிக்கை வசூல் ரூ.31 லட்சத்தை எட்டியது