ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த பிச்சைக் கனி என்ற புறா கனி, விழுப்புரத்தைச் சேர்ந்த முகம்மது ஆமீர் என்ற அருண்குமார், கடலூரைச் சேர்ந்த முகம்மதலி என்ற மணிகண்டன் ஆகிய மூன்று பேரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், "எங்கள் மூன்று பேரையும் சட்டவிரோத பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் பயிற்சி எடுத்துள்ளதாகவும், மேலும் அந்த அமைப்பிற்கு நாங்கள் ஆட்கள் சேர்த்ததாகவும் எங்கள் மீது காவல் துறையினர் பொய் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் விசாரணைக் கைதியாக நாங்கள் கடந்த 6 மாதமாகச் சிறையில் உள்ளோம். இந்த வழக்கில் நாங்கள் கீழமை நீதிமன்றத்தில் பிணை கோரி வந்தோம். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்ஐ வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கிலும், எங்கள் பெயரைப் பொய்யாகச் சேர்த்துள்ளனர்.
அந்த வழக்கிற்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என தெரிந்தும் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் பொய்யாக அந்த வழக்கில் காவல் துறையினர் இணைந்துள்ளனர். எனவே இந்த வழக்கில் எங்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து தேவிபட்டிணம் காவல் ஆய்வாளர் உடனடியாகப் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.