மதுரை மாவட்டத்தில் covid-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆய்வுக் கூட்டம் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் 10 லட்சத்து 77 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 34 ஆயிரத்து 805 பேருக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேபோன்று இறப்பு விழுக்காடு 1.3 என்ற அளவில் மட்டுமே உள்ளது. ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற வளர்ந்த நாடுகளில் இறப்பு விகிதம் 14 விழுக்காடாக உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது நிகழ்கின்ற இறப்புகளில் பெரும்பாலும் வேறு சில நோய்களாலே ஏற்படுகின்றன. மதுரையைப் பொறுத்தவரை கரோனா தொற்று சமூகப் பரவல் அடையவில்லை.
சென்னை போன்ற நிலை ஏற்படாமல் இருக்க மதுரை மாவட்ட நிர்வாகம் மிகக் கடுமையாக உழைத்துவருகிறது. இதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். தற்போது ஆயிரத்து 400 படுக்கைகளும், தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் ஆயிரத்து 800 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. மருத்துவர்களும் செவிலியரும் சுகாதாரப் பணியாளர்களும் 24 மணி நேரமும் பணியாற்ற தயாராக உள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்கள் தன்னார்வத்துடன் பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கு முன்வர வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு