மதுரை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முனியாண்டியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகமலை புதுக்கோட்டையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் செல்லும் இடங்களில் எல்லாம் அவரது தந்தை கருணாநிதிக்கு மெரினாவில் ஆறடி நிலம் தரவில்லை என்று மக்களிடம் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார். ஆனால், சென்னையில் உள்ள காமராஜர் நினைவு மண்டபம் அருகே தமிழ்நாடு அரசு கருணாநிதிக்காக இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கியது அதை ஆதாரத்துடன் தெரிவிப்பேன் என்று அவர் கூறினார்.
மேலும், பேசிய முதலமைச்சர் பழனிசாமி, பெருந்தலைவர் காமராஜர் இந்தியா முழுவதும் அறிந்த ஒரு தேசியத் தலைவர். இரண்டு பிரதமர்களை உருவாக்கியவருக்கே அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி மெரினாவில் இடம் தர மறுத்துவிட்டார். அதற்கு கருணாநிதி சொன்ன காரணம், காமராஜர் முதலமைச்சராக மரணம் அடையவில்லை ஆகையால் அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என்று தெரிவித்தார். ஆனால், அதிமுக அரசு கருணாநிதி மறைந்தபோது நினைத்திருந்தால் ஸ்டாலின் நீதிமன்றத்திற்கு சென்றபோதே நாங்கள் மேல்முறையீடு செய்திருப்போம் அவ்வாறு செய்வது நாகரீகமாக இருக்காது என்பதால் கருணாநிதிக்கு சமாதி அமைப்பதை தடுக்கவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஒரு மக்கள் இயக்கம் என்னைப் போன்று இங்கு சாதாரண தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வர முடியும். ஆனால், திமுகவில் இருக்கும் ஒரு தொண்டன் தலைவன் ஆக முடியுமா?. முதலில் கருணாநிதி தலைவனாக இருந்தார். தற்போது அவரது மகன் ஸ்டாலின் தலைவனாக இருக்கிறார். திமுகவில் ஒரு அடிமட்ட தொண்டனுக்கு எந்த மரியாதையும் கிடையாது. அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த இயக்கம் ஆகையால் அதிமுகவை யாரும் அசைக்க முடியாது என்று தெரிவித்தார்.