மதுரை அதன் சுற்று வட்டாரத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக, திருப்பரங்குன்றத்தில் உள்ள அரசு மருத்துவமனையை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆய்வு செய்தார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ' ஊடகங்கள் மூலம் குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்ய வந்தேன். இங்கு நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் குறைவாக உள்ளன.
மேலும் ரத்த தட்டணுக்கள் சோதனை மட்டுமே செய்யும் வசதி உள்ளது. எலிசா பரிசோதனை செய்வதற்கான வசதியும் இங்கு இல்லை. இந்த அரசு இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துத் துறைகளையும் பார்வையிட்டோம். பிசியோதெரபி துறையைப் பொறுத்தவரை போதுமான வசதிகள் இல்லை. நான் எதிர்க்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என்பதால், நான் கூறும் எந்த குறைகளுக்கும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இது எனது பொதுவான குற்றச்சாட்டு' எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ' மருத்துவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கையுடன் நாம் இருக்க வேண்டும். இதனைத் தடுப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறினார்.
இதையும் படிங்க: