மதுரை சின்ன கண்மாய் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். தொழிலதிபரான இவரது வீட்டிற்கு இளைஞர்கள் இருவர் கொரியர் கொடுப்பதற்காக வந்துள்ளனர். இதைப்பார்த்த வெற்றிவேலின் மனைவி, கொரியரை வாங்க வீட்டில் இருந்து வெளியில் வந்தபோது செல்லோ டேப் மூலம் வாயை மூடி, கயிற்றால் கை, கால்களை கட்டிப் போட்டுள்ளனர்.
பின்னர் வீட்டிற்குள் புகுந்த அவர்கள் பீரோவில் இருந்த 46பவுன் தங்கம், ரூ.32 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் உதவியோடு சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் உரிமையாளரை கட்டிப் போட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.